12 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது
ஜோலார்பேட்டையில் 12 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் திருப்பத்தூர் மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சுற்றித்திரிந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அவரது பையை சோதனை செய்ததில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனதில் அவர் ஆந்திர மாநிலம் கடதுல்லா கிராமத்தை சேர்ந்த ஜெகநாதம் மகன் கிரிசாணி மகேஸ்வராவ் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள வழக்குப் பதிவு செய்து சேலம் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.