ஆண்டிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு காவி துண்டு போர்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி வருகை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே கடந்த 23-ந் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமைக்கு தொண்டர்கள், நிர்வாகிகளிடையே ஆதரவு பெருகியது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னைக்கு வந்தார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் அங்கிருந்து வேன் மூலம் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு வந்தார்.
அப்போது அவருக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 5 மணியளவில் ஆண்டிப்பட்டிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சையதுகான், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்கியும் வரவேற்பு அளித்தனர்.
காவி துண்டு
இதையடுத்து ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் க.விலக்கு பகுதியிலும் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அதனை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், கையெடுத்து கும்பிட்டபடியே வேனில் தேனி வழியாக பெரியகுளம் நோக்கி புறப்பட்டார்.
இதற்கிடையே ஆண்டிப்பட்டி நகரில் பா.ஜ.க.வினரும் அவரை வரவேற்றனர். அப்போது அவருக்கு காவி நிறத்திலான துண்டு போர்த்தப்பட்டது. முன்னதாக ஆண்டிப்பட்டி கணவாய் மலையில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் ஓ.பன்னீசெல்வம் சாமி தரிசனம் செய்தார்.
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு பா.ஜ.க.வினர் காவி துண்டு போர்த்தி வரவேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தேனி பங்களாமேடு, நேரு சிலை சிக்னல், அல்லிநகரம் ஆகிய இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். பெரியகுளத்திலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.