அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு

பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நீங்காத செல்வம், நோய் நொடி இன்றி வாழ்க்கை ஆகியவற்றை அங்காள பரமேஸ்வரி அம்மன் வழங்குவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
துர்கா ஸ்டாலின் குலதெய்வ கோவில்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது தந்தை ஜெயராமன் குடும்பத்தினரின் குலதெய்வ கோவிலான இந்த கோவிலுக்கு ஏராளமான குலதெய்வ பக்தர்கள் உள்ளனர்.கடந்த 2010-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற ஐதீகத்தின்படி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின் படி இ்ந்த கோவிலில் புதிய ராஜகோபுரம், புஷ்கரணி, கொடிமரம், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் மற்றும் மூலஸ்தான திருப்பணிகள் நடந்து முடிந்தன.
யாகசாலை பூஜைகள்
இதனையடுத்து கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கியது. குடமுழுக்கையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக யாக பூஜைகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு லட்சுமி பூஜை, சுமங்கலி பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடந்தன.
குடமுழுக்கு
பின்னர் மேள, தாளம் முழுங்கிட துர்கா ஸ்டாலின் முன்னிலையில் புனித நீர் அடங்கிய யாக குடங்களை சிவாச்சாரியார்கள் விமான கோபுரங்களுக்கு சுமந்து சென்றனர். இதனையடுத்து விமான ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஒவ்வொரு சன்னதிகளாக சிவாசாரியார்கள் புனித நீரை அபிஷேகம் செய்து மகா குடமுழுக்கு செய்து வைத்தனர்.இதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சந்தனம், பூக்கள் மற்றும் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கே கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி...' என சரண கோஷமிட்டனர்.
மகாஅபிஷேகம்
இதனையடுத்து மூலவர் அங்காள பரமேஸ்வரிக்கு மகா அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.குடமுழுக்கு விழாவில் துர்கா ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு தலைவர்கள் கமல ஜோதி தேவேந்திரன்(சீர்காழி), நந்தினி ஸ்ரீதர்(செம்பனார்கோவில்) ஜெயபிரகாஷ்(கொள்ளிடம்), தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, செம்பனார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.குடமுழுக்கையொட்டி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






