அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தரகம்பட்டியில் பிரசித்தி பெற்ற பெரிய அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சின்ன அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த 12 ஆண்டுகளாக திருவிழா நடைபெற வில்லை. இதையடுத்து இந்தாண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் குடிப்பாட்டுக்காரர்களின் குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தல், முடி காணிக்கை செலுத்துதல், கிடாய் வெட்டு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் மாலையில் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் தரகம்பட்டி பெரும்பூஜை கரையிலிருந்து சுவாமிகள் மற்றும் பூசாரிகளை கோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் 3 மந்தை 24 ஊர் பொதுமக்கள், குடிப்பாட்டுக்காரர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.