பொள்ளாச்சி அருகே அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலை பூட்டியதால் பரபரப்பு-பொதுமக்கள் போராட்டம்
பொள்ளாச்சி அருகே அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலை பூட்டியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலை பூட்டியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலுக்கு பூட்டு
பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து அம்மனை வழிபட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த புதிதாக சிலையை வடிவமைத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அவர்கள் வரும் போது கோவிலில் பூசாரிகளாக பணியாற்றி வரும் ஒரு தரப்பினர் பூட்டி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிலை கொண்டு வரப்பட்ட வாகனத்தில் வைத்து மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் கோவில் முன் சிலையை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுகுறித்து கோவில் தலைவர் சேகர் என்பவர் கூறியதாவது:-
பொதுமக்கள் போராட்டம்
கடந்த 1988-ம் மற்றும் 2005-ம் ஆண்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் மாமல்லபுரத்தில் இருந்து புதிதாக அம்மன் சிலை வடிவமைத்து கொண்டு வரப்பட்டது. ஆனால் பூசாரிகள் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர். கோவிலை திறக்க சாவியை கேட்டும் கொடுக்காததால் கோவில் முன் சிலையை வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், சிலையை வைப்பதற்கும் அனுமதி பெற வேண்டும். இதற்கிடையில் பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் புகார் கொடுத்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்றனர்.