ஆபத்தான நிலையில் அங்கன்வாடி கட்டிடம்
பொள்ளாச்சி அழகாபுரி வீதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தங்கம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அழகாபுரி வீதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தங்கம் காட்டி வருகின்றனர்.
கழிப்பிட வசதி இல்லை
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிற்கு அருகில் அழகாபுரி வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அங்கு மேற்கூரையை தாங்கி நிற்கும் மரத்துண்டு, கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மரத்துண்டு கீழே விழாமல் இருக்க கம்பு வைத்து முட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.
இதற்கிடையில் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் குப்பைகளை கொட்டி வைத்து உள்ளனர். குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுதால் குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பெற்றோர் தயக்கம்
அழகாபுரி வீதியில் அங்கன்வாடி மையம் சிமெண்டு மேற்கூரையால் ஆன கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மேற்கூரை பழுதடைந்து காணப்படுவதால் மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் குழந்தைகளை பெற்றோர் அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மதிய உணவு நேரத்திற்கு மட்டும் குழந்தைகள் வருகின்றனர். மற்ற நேரங்களில் பெற்றோர் அழைத்து சென்று விடுகின்றனர். இதனால் ஒரு சில குழந்தைகள் மட்டும் அங்கன்வாடியில் உள்ளனர்.
குடிநீர் இணைப்பு இல்லாததால் தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க வேண்டிய உள்ளது. அதுவும் அங்கன்வாடி செயல்படாத நேரங்களில் தண்ணீர் வந்தால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
மேலும் இதே வளாகத்தில் செயல்பட்ட நகராட்சி பள்ளி மூடப்பட்டதால் அங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை முறையாக பிரித்து உரம் மயமாக்கல் பணிகளை மேற்கொள்ளாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே அங்கன்வாடி மையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டி கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், அங்கன்வாடி அருகே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.