சென்னிமலையில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்


சென்னிமலையில்   இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்
x

அங்கன்வாடி மைய கட்டிடம்

ஈரோடு

சென்னிமலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பாழடைந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர்.

அங்கன்வாடி மைய கட்டிடம்

சென்னிமலையில் பார்க் ரோட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இங்கு ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளர் என 2 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 20 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

1982-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது 40 ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து விட்டது. இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் மரங்கள் முளைத்து அதன் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் வளர்ந்து காணப்படுகிறது.

தண்ணீர் தேங்குகிறது

இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தில் சமையலறை, பொருட்கள் வைக்கும் அறை ஆகியவை உள்ளது. இந்த அறைகளின் மேல் பகுதி மிகவும் சிதிலமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிந்து அறைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு சமையல் செய்யாமல் வகுப்பறை உள்ள இடத்தில் பணியாளர்கள் சமையல் செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்குவதால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பதாலும், உயிருக்கு பயந்தும் பெற்றோர்கள் மழைக்காலங்களில் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதில்லை என கூறப்படுகிறது.

மாற்று ஏற்பாடு

இதுகுறித்து அந்த பகுதியின் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் கூறுகையில், 'இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் நிலை பல ஆண்டுகளாக இப்படியேத்தான் உள்ளது. எந்த நேரத்திலும் கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் மழைக்காலங்களில் குழந்தைகளை இந்த மையத்துக்கு அனுப்புவதில்லை. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

நேற்று காலையில் மழை பெய்து கொண்டிருந்ததால் பெற்றோர்கள் யாரும் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story