மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மேனகா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை, மாவட்ட துணை தலைவர் தனலட்சுமி உள்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிசெய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு விரைந்து பணப்பலன்கள் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடனுதவி வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.