அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
விழுப்புரம்
கலெக்டர் அலுவலகம் எதிரே
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் ராமதிலகம் தலைமை தாங்கினார். செயலாளர் மலர்விழி, கோரிக்கை விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கலந்துகொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.
காலி இடங்களை நிரப்ப வேண்டும்
10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகாலம் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பார்ப்பதால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதை சரிசெய்ய உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் புனிதா நன்றி கூறினார்.