திண்டுக்கல் உள்பட 15 இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் உள்பட 15 இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் உள்பட 15 இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பத்மாவதி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளை போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் 1 மாத கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் கென்னடி மாநகராட்சி பள்ளி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவி பாரதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அனுராதா முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கணேசன் கலந்துகொண்டு பேசினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஒன்றிய பொறுப்பாளர் மலர்விழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய பொறுப்பாளர்கள் நாகலட்சுமி, மாரியம்மாள் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச்செயலாளர் சாதிக்அலி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நத்தத்தில் சங்கத்தின் வட்டார தலைவர் நித்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாகி சண்முகவள்ளி, சி.ஐ.டி.யூ. நிர்வாகி குழந்தைவேல் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.