பேனரில் பெயர் சேர்த்ததால் ஆத்திரம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வாக்குவாதம்
பேனரில் பெயர் சேர்த்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆங்காங்கே போஸ்டர் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரத்தில் அ.தி.மு.க. பேரூர் நிர்வாகிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேனர் வைக்கப்பட்டது. இதில், அவரது ஆதரவாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இதுமட்டுமின்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலரின் பெயர்களும் பேனரில் சேர்த்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், பேனரில் தங்களது பெயர்களை எப்படி சேர்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் கேட்டு தகராறு செய்தனர். மேலும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பேனரில் இருந்த தங்களது பெயரை கிழித்து எடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோம்பை ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.