குடி தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் ஆத்திரம்: பொதுமக்கள் சாலை மறியல்: பெரியகுளம் அருகே பரபரப்பு
பெரியகுளம் அருகே குடி தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கண்மாய்கள்
பெரியகுளம் நகராட்சி பகுதியில் இருந்து செல்லும் கழிவுநீர் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக அனுப்பி வைக்கப் படுகிறது.
இந்நிலையில் புல் பண்ணையில் கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள நெடுங்குளம், புதுக்குளம், நஞ்சியாபுரம் கண்மாய்களில் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
நோய் பாதிப்பு
அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கழிவுநீர் தொடர்ந்து கண்மாய்களில் கலந்து வருகின்றன. தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே கண்மாய்கள் அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்டப்புளி ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் தண்ணீரில் கலந்து வருவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீர் கடந்த பல மாதங்களாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த எ.புதுப்பட்டி மற்றும் எண்டப்புளி கிராம மக்கள் போராட்டம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் எ.புதுப்பட்டி பிரிவில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த பெரியகுளம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் இது சம்பந்தமாக ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.