ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி பிரம்மோற்சவம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்களும், விசேஷ நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
முன்னதாக கோவிலில் அதிகாலை சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்றம்
பின்னர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் ஆகியோர் சாமி சன்னதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து காலை 6 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது
விழாவை முன்னிட்டு நேற்று காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.
இந்த விழா வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலையிலும், மாலையிலும் விநாயகர், சாமி வீதியுலா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.