பகவதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம்


பகவதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம்
x

லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர்

ஆனி தேரோட்டம்

கரூர் மாவட்டம், லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கம்பத்தில் ஊற்றியும், பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மாலையில் நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து, நிலை நிறுத்தினர். அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற பக்தர்கள் பகவதி அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.

நேர்த்திக்கடன்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அலகுத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியுடன், கிடா வெட்டு பூஜையும் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மாவிளக்கு பூஜை, சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

வருகிற 27-ந்தேதி கரகம் கருவறையில் இருந்து புறப்பட்டு வீதி உலா முடிந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், 29-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.


Next Story