கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் இன்று தொடங்குகிறது
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இன்று கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் தொடங்குகிறது.
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 280 முகாம்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (செவ்வாய்க்கிழமை) குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கோதண்டராமபுரம் கிராமத்தில் நடக்கிறது. இதில் கலெக்டர்தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும், முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலட்டு தன்மை நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் மற்றும் சிறு அறுவை சிகிச்சை கால்நடை மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர கால்நடை வளர்ப்போருக்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தின் பேராசிரியரால் விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.