கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:45 PM GMT)

நாகை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நாளை முதல் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நாளை முதல் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

முகாம்கள்

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு 22.2.2024 வரை ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 6 ஒன்றியத்திற்கு 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

கிடேரி கன்று பேரணி

இந்த சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

முகாமில் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு கால்நடை வல்லுனர்கள் பதிலளிக்க உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story