அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கத்துக்கு அனிதா பெயர்; முதல்-அமைச்சர் அறிவிப்பு
அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாக அரங்கத்தில் உள்ள அரங்கத்துக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிட குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா, தமிழ்வழிக் கல்வியில் படித்து அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் 1200-க்கு, 1,176 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், மத்திய அரசு, மருத்துவ சேர்க்கையினை 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால், மனம் உடைந்தார்.
இந்த நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோட்டில் மாணவி அனிதா மனு தாக்கல் செய்தார். நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
மசோதாவுக்கு ஒப்புதல்
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை செயலாளர் தலைமையில் அமைந்த அரசு செயலாளர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது.
கவர்னரால் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் வாயிலாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அனிதா நினைவு அரங்கம்
இந்த நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் கடந்த ஆண்டு (2022) ஜனவரி 12-ந்தேதியன்று முதல்-அமைச்சர் முன்னிலையில், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்துக்கு "அனிதா நினைவு அரங்கம்'' என பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.