நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம்

ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
பூக்களால் அலங்காரம்
இந்த நிலையில் நேற்று நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள் கோவிலை பூக்களால் அலங்காரம் செய்தனர். கோவிலின் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர் மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தனர். இதற்காக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா உள்ளிட்ட நிறங்களில் 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி நேற்று மாலை நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து அவற்றை 1,008 வடைகள் கொண்ட மாலைகளாக தொடுக்கும் பணி தொடங்கியது. மேலும் பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய வசதியாக போலீசார் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இன்று ஒருநாள் மட்டும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று இரவில் ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் மஞ்சுளா, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கோவில் செயல் அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






