ஆஞ்சநேயர் சிலை வெள்ளூர் கிராம மக்களிடம் ஒப்படைப்பு


ஆஞ்சநேயர் சிலை வெள்ளூர் கிராம மக்களிடம் ஒப்படைப்பு
x

ஆஞ்சநேயர் சிலை வெள்ளூர் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரியலூர்

செந்துறை:

4 சிலைகளை காணவில்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி பல கோடி ரூபாய் மதிப்புள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின. இது குறித்து அப்போதைய கோவில் தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் செந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராமன் இணையதளம் மூலம், வரதராஜபெருமாள் கோவிலின் ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, அப்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்த ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் ஒப்படைத்தார்.

கிராம மக்களிடம் ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிலையை உடனடியாக மீட்டு தங்களது கிராமத்திற்கு கொண்டு வந்து கோவிலில் வைத்து வழிபாடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு வெள்ளூர் கிராமத்திற்கு வந்த சிலை தடுப்பு பிரிவு போலீசார் கோவிலை ஆய்வு செய்தனர்.

மேலும் கும்பகோணம் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆஞ்சநேயர் சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து நேற்று அந்த ஆஞ்சநேயர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் வெள்ளூர் கிராம மக்களிடம் ஒப்படைத்தார். பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் அந்த சிலையை கிராம மக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அந்த சிலையை கோவிலுக்குள் கொண்டு சென்று வைத்தனர்.

ரூ.41 லட்சத்திற்கு விற்பனை

இதைத்தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இன்று(நேற்று) சொந்த ஊரில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டது. இந்த சிலை 16-ம் நூற்றாண்டில், விஜய நகர பேரரசு காலத்தை சேர்ந்தது. இது ஐம்பொன் சிலை ஆகும். இச்சிலை 50 ஆயிரம் டாலருக்கு (ரூ.41 லட்சம்) விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இன்று(நேற்று) அந்த சிலை பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை தொடர்ந்து இக்கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்படும். இதனுடன் கடத்தப்பட்ட மற்ற 3 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 23 சிலைகள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 64 சிலைகளை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள 15 சிலைகளை மீட்க இரு நாடுகளுக்கு இடையே கலாசார ஒப்பந்த சட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் சிலைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்ைற மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பாலமுருகன், அரியலூர் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் உடனிருந்தனர்.


Next Story