விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் திரு.வி.க. வீதியில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமி, அரசடி விநாயகர், லட்சுமி ஹயக்ரீவர், நவக்கிரகம், நாக சன்னதிகள் மற்றும் திருக்குளம் ஆகியவை செப்பனிடப்பட்டும், குளத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ள 90 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையின் நான்குபுற நுழைவுவாயில் விமானங்கள் நீராழி மண்டபம், கருவரை கோபுரம், சாலகோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் முதல்கால யாக சாலை பூஜை, வேத பாராயணம், பூர்ணாகுதி, தீபாராதனையும், நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் 3-ம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தன பிரதிஷ்டையும் நடந்தது.

மகா கும்பாபிஷேகம்

இதனை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடந்து, காலை 10 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள், திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் 26-ம் பட்டம், அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் திருமடம் திருக்கயிலாய கந்தப்பரம்பரை வாமதேவ ஸ்ரீகணேசதேசிக சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் விசாலாட்சி பொன்முடி, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், இணை ஆணையர் அலுவலக மேலாளர் கண்ணன் உள்பட விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாலை 6 மணிக்கு சீதாராம திருக்கல்யாண வைபவமும், இரவு 7.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேக அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் சாமி, லட்சுமி ஹயக்ரீவர், விநாயகர் திருவீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் லட்சுமி, பரம்பரை அறங்காவலர் குமார், கோவில் அர்ச்சகர் பத்மநாபாச்சார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story