அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை
சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா மார்க்கெட்
கோவை சாய்பாபாகாலனி அண்ணா மார்க்கெட்டில் 400 கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி மூட்டை ஒன்றுக்கு ரூ.1.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
அதை கடந்த ஆண்டு ரூ.5 ஆக உயர்த்தி மாநகராட்சி அதிகாரி கள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால் உயர்த்தப்பட்ட கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
வியாபாரிகள் போராட்டம்
இந்த நிலையில் மாநகராட்சி கூட்டத்தில் அண்ணா மார்க்கெட் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை அண்ணா மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் கனகராஜ் கூறியதாவது:-
அண்ணா மார்க்கெட்டில் கூரை கடைகள் மற்றும் மேடை கடைகள் என இருவகை கடைகள் உள்ளன. இதில் கூரை கடைகளின் தினசரி வாடகை ரூ.12-ல் இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டது. மேடை கடை வாடகை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.
இதேபோல் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி மூட்டை ஒன்றுக்கு ரூ.1.50 வசூலிக்கப்பட்டதை இருமடங்காக உயர்த்தி ரூ.3 வசூலிக்கப்படுகிறது.
குறைக்க வேண்டும்
இந்த கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டில் இதுவரை மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற்று வந்தது. அங்கு தற்போது சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இதனால் எங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் சில்லறை விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத் தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.