சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகம்
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன், அம்மன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மூலவருக்கு 100 கிலோ அரிசியில் சாதம் தயார் செய்து மாலை 5.30 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று சுகவனேசுவரர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அன்னாபிஷேகத்திற்காக வழங்கினர்.
திருக்கல்யாண உற்சவம்
இதேபோல் ஐப்பசி பவுர்ணமியையொட்டி சேலம் 2-வது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், அதைத்தொடர்ந்து காசி விசாலாட்சிக்கும், காசி விஸ்வநாதருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.
அதன்பிறகு காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமணக்கோலத்தில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து மாலையில் காய்கனிகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை 6 மணிக்கு காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதேபோல், பேளூர் தான் தோன்றீஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் உள்பட சிவன் மற்றும் அம்மன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது.