தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாமலை வெள்ளிக்கிழமைபாதயாத்திரை தொடங்கினார்


தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாமலை வெள்ளிக்கிழமை பாதயாத்திரை தொடங்கினார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார். அவருக்கு கோவில்பட்டியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாத யாத்திரை

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கினார்.

நேற்று மாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலையுடன் திரளான பா.ஜ.க.வினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டு இருந்த பொதுமக்களைப் பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டவாறும் நடந்து சென்றார்.

உற்சாக வரவேற்பு

கோவில்பட்டி மெயின் ரோடு, கிழக்கு பார்க் ரோடு, மேற்கு பார்க் ரோடு, எட்டயபுரம் ரோடு, புது ரோடு வழியாக சென்ற பாதயாத்திரை இரவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நிறைவடைந்தது. அங்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார்.

முன்னதாக பாத யாத்திரையாக வந்த அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். சிகரெட் லைட்டருக்கு தடை விதித்து கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரமாண்ட தீப்பெட்டியை கிரேன் மூலம் தூக்கி, நடைபயணம் செல்லும் வழியில் சாலையோரமாக நிறுத்தி இருந்தனர். நடைபயணத்தில் பங்கேற்ற பலரும் பிரதமர் மோடியின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை தூக்கியவாறு சென்றனர். ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

பாத யாத்திரையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகுருசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் போஸ், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜ், மாவட்ட பொருளாளர் கணேஷ், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீப்பெட்டி தொழில்

முன்னதாக சாத்தூரில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது:-

இந்த பகுதியில் சுமார் 4 ஆயிரம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. சீன லைட்டரை மத்திய அரசு தடை செய்துள்ளதால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது. இந்தியாவில் புதிதாக 7 ஜவுளி பூங்கா தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதில் ஒன்றை அருப்புக்கோட்டை பகுதியில் அமைக்க பிரதமர் நரேந்திரமோடி வழங்கி உள்ளார். இதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் கோடி கடனாக கொடுத்து இருக்கிறார். அந்த பட்டியலில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களை பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வருவார். அதில் 40 எம்.பி.க்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பா.ஜனதா கூட்டணி சார்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடைபயணத்தின் போது ஏராளமான இளைஞர்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். படந்தால் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் நலம் விசாரித்து, டீ குடித்தார். சாத்தூர் தபால் நிலையத்துக்கு வந்த அண்ணாமலை அங்கு தேசிய கொடிகளை வாங்கினார்.


Next Story