எடப்பாடி பழனிசாமியுடன், அண்ணாமலை திடீர் சந்திப்பு ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியதால் பரபரப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு நடந்து முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை திடீரென்று சந்தித்து பேசினார்.
சென்னை,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நொடிக்கு, நொடி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது இல்லத்திற்கு சென்று ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார். அவருடன் பா.ஜ.க. மேலிட பார்வையாளர் சி.டி.ரவியும் வந்திருந்தார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் சந்தித்து பேசினர்.
அரசியல் முக்கியத்துவம்
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு ஆதரவு கேட்டு அவர்கள் வந்துள்ளதாக அ.தி.மு.க. சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கையோடு ஓ.பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு அவர்கள் ஆதரவு கேட்டும், அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில் பா.ஜ.க.வினரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.