அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று துணை வேந்தர் அறிவித்துள்ளாா்.
அண்ணாமலை நகர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இன்று காலை ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கி பேசுகையில், இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களில் 2-வது சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் மீண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். இதற்காக ஒரு குழு அமைத்து சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தின விழாவில் விருது வழங்கப்படும் என்றார்.
பொறியியல் புல முதல்வர் முருகப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் முன்னாள் ஆலோசகருமான ஏ.கலாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழை வளர்த்த பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் தமிழுக்காக மட்டும் தொடங்கப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சி. பிறந்த நாளும் இன்றுதான். இவரையும் மாணவர்கள் மறந்து விடக்கூடாது. திருமூலர் கூறியது போல் அனைவரும் மூச்சு பயிற்சி செய்தால் ஐம்புலன்களையும் அடக்கி பெரிய மகான் ஆகலாம் என்றார்.
இதனை தொடர்ந்து பேராசிரியர்களின் கண்டுபிடிப்புகளுக்கு சர்வதேச காப்புரிமைக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக நிலையான வளர்ச்சிக்கான கல்வி என்ற நூலை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி வெளியிட்டார். விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் நன்றி கூறினார்.