12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஅண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பேரணி
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பேரணி சென்றனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பைப்பினர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், ஆசிரியர், ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்க கோரியும், ஓய்வூதியர்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
பேரணி
இந்த நிலையில், நேற்று மாலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஆசிரியர், ஊழியர்கள் தங்களது 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.மனோகரன், ஆ.ரவி, பேராசிரியர்கள் சுப்பிரமணியன், பாஸ்கர், இளங்கோ, செல்வராஜ், செல்ல.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள். பேரணி முக்கிய சாலை வழியாக ராஜேந்திரன் சிலையை அடைந்தது. பின்னர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துவிட்டு, சென்றனர்.