பாதயாத்திரையின்போது பறை இசைத்து நடனம் ஆடிய அண்ணாமலை


பாதயாத்திரையின்போது பறை இசைத்து நடனம் ஆடிய அண்ணாமலை
x

பாதயாத்திரையின்போது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பறை இசைத்து நடனமாடினார்.

கொடைக்கானல்,

'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் நேற்று முன்தினம் பாதயாத்திரை தொடங்கினார்.

இந்தநிலையில் நேற்று அவர் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்திற்கு சென்றார். அப்போது கிராம மக்கள் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு இசைத்து கொண்டிருந்த பறையை வாங்கி இசைத்து சிறிது நேரம் அவர்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார்.

கோல்ப் விளையாடினார்

பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அது தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை கோல்ப் கிளப் பகுதிக்கு சென்று பயிற்சியாளர்களிடம் உரையாடினார்.

சிறிது நேரம் அவர் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து நடிகை சாவித்திரி பங்களாவுக்கு சென்று அண்ணாமலை பார்வையிட்டார். அங்கு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மலைப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து மலைவாழ் மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும். இந்தியாவில் உள்ள 112 மாவட்டங்களை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களும் அடங்கும். இதேபோல் தமிழக அரசும் மலைப்பகுதியில் உள்ள நகரங்களை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்.

சனாதனம்

சனாதனம் என்பது அனைவருக்கும் சமமானது. இதுகுறித்து பல அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதேபோல சனாதனம் குறித்து பேசிய தமிழக அமைச்சரை தாக்க வேண்டும் என்று கூறுவது தவறாகும். அதனை திருத்தி கொள்ள வேண்டும்.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை பா.ஜ.க. வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story