அடிப்படை வசதிகள் இல்லாத அன்னவாசல் அரசு மருத்துவமனை


அடிப்படை வசதிகள் இல்லாத அன்னவாசல் அரசு மருத்துவமனை
x

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, எக்ஸ்ரே கருவி பழுது மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது, 6 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால், கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பல்வேறு நோய்களுக்கும், அவசர சிகிச்சைக்கும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணி கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட போதிய டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும்

இலுப்பூர்-அன்னவாசல் மெயின் சாலையில் இந்த மருத்துவமனை உள்ளதால், தினமும் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வருவோருக்கும் முதலுதவி சிகிச்சை கூட பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சாலை விபத்துக்கள், விஷக்கடிகள், விஷ மருந்து உட்கொள்ளுதல் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வேண்டியவர்கள் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில நேரங்களில் அங்கு செல்வதற்குள் உயிர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. எனவே அன்னவாசல் மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

எக்ஸ்ரே கருவி பழுது

கடந்த பல மாதங்களாகவே அன்னவாசல் அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே மையத்தில் கருவி பழுதாகி வேலை செய்யவில்லை. இதனால் வேறொரு அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு எக்ஸ்ரே கருவியை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துவந்து பின்னர் சில நாட்களில் மீண்டும் அந்த எக்ஸ்ரே கருவி அதே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த மருத்துவமனையில் ஒரு ஆண்டுக்கு மேலாக எக்ஸ்ரே கருவிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் அன்னவாசல் அரசு மருத்துவமனையை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதால் அன்னியர்கள் உள்ளே வந்து மது அருந்துவது, தகாத செயலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

போதுமான டாக்டர்கள் இல்லை

அன்னவாசல் லோகநாதன்:- அன்னவாசல் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மணி கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இங்கு உள்ள எக்ஸ்ரே மையம் செயல்படவில்லை. இங்கு வரும் நோயாளிகள் போதிய வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நிலை எழுந்துள்ளது. எனவே போதிய டாக்டர்களை நியமித்து ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை...

சித்தன்னவாசல் மாரிமுத்து:- அன்னவாசலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள், இந்த அரசு மருத்துவமனையை நம்பி வருகிறோம். ஆனால் இந்த மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர்கள் இல்லை. இந்த நிலையில் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஏழ்மையானவர்களுக்கு ஏற்ற மருத்துவத்தை அன்னவாசல் அரசு மருத்துவமனையிலேயே வழங்க ஆவண செய்ய வேண்டும்.

பிரசவம் பார்ப்பது குறைந்து விட்டது

அன்னவாசலை சேர்ந்த தாஜ்நிஷா:- கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு பிரசவங்கள் பார்க்கப்பட்டது. நாளடைவில் தற்போது சரியான பெண் டாக்டர்கள் இல்லாததால் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் பிரசவங்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது கர்ப்பிணிகள் அங்கு சென்றாலும் முக்கண்ணாமலைப்பட்டி, மதியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். எனவே அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும்

முக்கண்ணாமலைப்பட்டி ரகுமத்துல்லா:- அன்னவாசல் அரசு மருத்துவமனை புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மைய பகுதியில் உள்ளது. இம் மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் இம்மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 20 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story