சீன எழுத்துக்களால் அச்சிடப்பட்ட சிலிண்டர் வெடிக்க வைத்து அழிப்பு
நாகை நம்பியார் நகர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சீன எழுத்துக்களால் அச்சிடப்பட்ட சிலிண்டர் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது.
நாகை நம்பியார் நகர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சீன எழுத்துக்களால் அச்சிடப்பட்ட சிலிண்டர் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது.
சீன எழுத்துக்கள்
நாகை நம்பியார்நகர் கடற்கரையோரம் மர்ம சிலிண்டர் ஒன்று கடந்த 14-ந்தேதி கரை ஒதுங்கி கிடந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதி மீனவர்கள், இது குறித்து நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர காவல் குழும போலீசார் அந்த சிலிண்டரை ஆய்வு செய்தனர்.அந்த சிலிண்டர் 3 அடி உயரமும், 30 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. மேலும் சிலிண்டரில் சீன எழுத்துக்களும், பக்கவாட்டில் 400 999 7871 என்ற எண்களும் பொறிக்கப்பட்டு இருந்தது.
சிலிண்டரை வெடிக்க செய்தனர்
இதனை தொடர்ந்து அந்த சிலிண்டரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த சிலிண்டரில் கியாஸ் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது என்பதால் அதை வெடிக்க வைத்து அழிக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தி, ராஜேஷ் ஆகியோர் அடங்கிய கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை புதிய கடற்கரைக்கு பாதுகாப்புடன் சிலிண்டரை கொண்டு வந்தனர்.
அங்கு 20 அடி ஆழத்திற்கு பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டினர். பின்னர் அதில் சிலிண்டரை புதைத்தனர். சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு செயலிக்க செய்யும் அதிகாரிகள் உதவியுடன் சிலிண்டரை வெடிக்க செய்தனர். இதனால் நாகை புதிய கடற்கரையில் தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.