பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறதுஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம்;அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட தொழில் அதிபர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு..முத்துசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த வாரம் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் சேர்ந்து நான் ஜப்பான் சென்றேன். அங்கு புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தோம். உலகிலேயே புற்றுநோய் ஆரம்ப நிலையை கண்டறிவதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. எனவே அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
ஈரோட்டில் புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் புற்றுநோய் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மையம் அமைப்பது தொடர்பாக வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் இது தொடர்பாக முழு விவரங்களை தெரிவிக்க முடியாது.
இந்தியாவிலேயே மும்பையில் தான் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தென் மாநிலங்களில் காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெரியார், வ.உ.சி. இடையே நட்பு இருந்துள்ளது. இதற்கு உதாரணமாகத்தான் ஈரோட்டில் உள்ள பூங்காவுக்கு வ.உ.சி. என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவையொட்டி கோவையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் வெண்கலச்சிலை வைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.