மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு
மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு
கோவை
கோவை மாநகராட்சியில் 2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் ரூ.3,029 கோடிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்தார். பொதுத்தேர்வில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 100 சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் தாக்கல்
கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் 2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் கல்பனா ஆனந்தகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
2023-24-ம் நிதியாண்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய்3,018.90 கோடி. இதில் மொத்த செலவினம் ரூ.3,029.07 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வருவாய்பற்றாக்குறை ரூ.10 கோடியே 17 லட்சம் ஆகும்.
சாலை சீரமைப்பு
கோவை மாநகரில் 2,240 கிலோ மீட்டர் நீளம் தார்சாலை, 243.67 கி.மீ. நீளம் சிமெண்ட் சாலை, 16.68 கி.மீ. நீளம் கற்சாலைகள், 114 கி.மீ. நீளம் மண் சாலைகள் உள்ளன. இதில் பழுதடைந்த 51.43 கி.மீ.சாலைகள் ரூ.34 கோடியே 93 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 118.66 கி.மீ நீள சாலைகள் ரூ.80 கோடியே 47 லட்சம் செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வருகிற நிதியாண்டில் 290.11 கி.மீ. சாலைகள் ரூ.135 கோடியில் சீரமைக்கப்படும்.
உக்கடம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களின் வாயிலாக 2.41 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.16.93 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின் சக்தி மின் உற்பத்தி திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
மேலும் ரூ.1 கோடி மதிப்பில் பள்ளிகளுக்கு புதிய மேஜைகள், நாற்காலிகள் வாங்கப்படும். அதேபோல் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கணினிகள் வாங்கப்படும். ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மெய் நிகர் தொழில்நுட்பம் மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பொதுத்தேர்வில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்யும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மாநகராட்சி பள்ளிகளில் ரூ.25 கோடியில் அடிப்படை வசதிகளும், கூடுதல் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியில் உள்ள 17 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.50 லட்சத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் ரூ.1 கோடியில்தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.
3-வது குடிநீர் திட்டம்
வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ.935. 92 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவுற்றவுடன் 67,545 வீட்டு இணைப்புகள் வழங்கப்படும்.இந்த திட்டத்தினால் 4 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். அதே போல் சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு சின்னவேடம்பட்டி ஆகிய இணைக்கப்பட்ட பகுதிகளின் 9 வார்டுகளுக்கு ரூ.357.88 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டம் தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. திட்டத்தின் முடிவில் 22,943 வீட்டிக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 815 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
சீரான குடிநீர் வழங்குவதற்காக பவானி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் குடிநீர் திட்டம்-3 ரூ.779.86 கோடியில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்படும். அம்ரூத் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது ஜெயராம் நகர், ரேவதி நகர், சேரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4,931 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வருவாய் பற்றாக்குறை ரூ.10 கோடியாக குறைந்தது
கடந்த நிதி ஆண்டில் (2022-23) ரூ.2,337.28 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வருவாய் பற்றாக்குறையாக ரூ.19 கோடியே 31 லட்சம் இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ரூ.3 ஆயிரத்து 29 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.700 கோடியாகும். இதற்கு முக்கிய காரணம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மேலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் கோவை மாநகராட்சிக்கு ரூ.542 கோடியே 33 லட்சம் சொத்து வரி கிடைத்து உள்ளது. கடந்த நிதியாண்டில் மாநகராட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.19 கோடியே 31 லட்சம் என்று இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் ரூ.10 கோடியே 17 லட்சம் ஆக குறைந்து உள்ளது.
மேயர் விருப்ப நிதி ரூ.1 கோடி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும் மேயர் கள ஆய்வின் போதும் தெரிவிக்கப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மேயர் விருப்ப நிதி இந்த நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் அவரவர் வார்டுகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும்.
கூகுள் பே, போன் பே மூலம் வரி வசூல்
கோவை மாநகராட்சியின் மண்டல வரி வசூல் மையங்கள், வார்டு வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் ரொக்கம், காசோலை, வங்கி வரைவோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகிய முறைகளிலும் மற்றும் ஸ்வைப் எந்திரம், நெட் பேங்கிங் போன்றவைகளின் மூலமும், இணையதளம் வாயிலாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வரி செலுத்துவதில் மேலும் கூடுதல் வசதிகள் அளிக்கும் பொருட்டு க்யூ ஆர் கோர்டு ஸ்கேனிங், கூகுள் பே, போன் பே முதலிய செயலிகள் மூலம் இனி பொதுமக்கள் வரி செலுத்தலாம். இதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்த ரூ.25 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
மின்னணு சார்ஜிங் நிலையங்கள்
மாநகரில் பெருகி வரும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மாநகராட்சியில் 20 இடங்களில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி மின்சார சார்ஜிங் நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நிறுவப்படும். தொடர்ந்து பட்ஜெட்மீதான விவாதம் நடந்தது.