விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு
செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டதால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
செய்யாறு
செய்யாறு சிப்காட் விரிவாக்கப் பகுதிக்கு அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிப்காட் தொழிற்பேட்டைக்கு மேல்மா பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சார்பில் மேல்மா கூட்ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.
இதையொட்டி இன்று செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்ட குழு சார்பில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தனர்.
போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் அனுமதி அளிக்காவிட்டாலும் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க திரண்டு வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் செய்யாறில் பரபரப்பு ஏற்பட்டது.