ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆலையில் உறைந்த நிலையில் இருந்த ஜிப்சம் கழிவுகள் பொக்லைன் மூலம் உடைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றுவதற்கு தயார் செய்யப்பட்டது. உடைக்கப்பட்ட ஜிப்சம் கழிவுகள் நேற்று முன்தினம் லாரிகளில் ஏற்றி வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதனை மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். முதல் நாளில் 4 லாரிகள் மூலம் சுமார் 210 டன் ஜிப்சம் அகற்றப்பட்டது.
2-வது நாளான நேற்று 12 லாரிகளில் சுமார் 550 டன் ஜிப்சம் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் 2 நாட்களில் சுமார் 760 டன் ஜிப்சம் ஆலையில் இருந்து அகற்றப்பட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருவதால் ஆலையின் நுழைவுவாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.