நெல்லை கல்குவாரி விபத்தில் பலி: பாறையை வெடிவைத்து தகர்த்து இன்னொருவர் உடல் மீட்பு


நெல்லை கல்குவாரி விபத்தில் பலி:  பாறையை வெடிவைத்து தகர்த்து இன்னொருவர் உடல் மீட்பு
x

நெல்லை கல்குவாரியில் பாறையை வெடிவைத்து தகர்த்து இன்னொருவர் உடல் மீட்கப்பட்டது. கொட்டும் மழையில் 6-வது நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை கல்குவாரியில் பாறையை வெடிவைத்து தகர்த்து இன்னொருவர் உடல் மீட்கப்பட்டது. கொட்டும் மழையில் 6-வது நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கல்குவாரி விபத்து

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்களான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

அதில் முருகன், விஜய், செல்வம், மற்றொரு முருகன் ஆகிய 4 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். ஆனாலும் செல்வம், ஆயன்குளம் முருகன் ஆகிய 2 பேர் இறந்து விட்டனர். மற்ற 2 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது.

பாறைகள் சரிந்து விழுந்தது

நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மீட்புப்குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாறைகளுக்கு நடுவில் சிக்கியிருக்கும் 5-வது நபர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த மீட்பு பணி இரவு வரை நீடித்தது. நள்ளிரவில் பாறைகள் மீண்டும் சரிந்து விழுந்ததால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 6-வது நபர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய் ரெக்ஸ் களம் இறக்கப்பட்டது.

மீட்பு பணி தொடங்கியது

இந்த நிலையில் நேற்று 5-வது நாளாக மீட்புப்பணி தொடர்ந்தது. காலையில் மண்ணியல் துறை வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் மீட்புக்குழுவினர் பணியை தொடங்க ஆயத்தம் ஆகினர்.

அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் பணியை தொடங்கினர். அப்போதும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், மீட்புக்குழுவினர் ெகாட்டும் மழைைய பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

வெடிவைத்து தகர்ப்பு

இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் ராட்சத பாறையை கடப்பாரை கொண்டு நகர்த்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அடுத்தக்கட்ட முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, ராட்சத பாறையில் டிரில்லர் எந்திரம் கொண்டு 10 இடங்களில் லேசாக துளையிட்டு அதில் தலா 120 கிராம் எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகளை வெடியாக செலுத்தி பாறையை தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. இதில் பாறை பல துண்டுகளாக சிதறியது. இதனை தொடர்ந்து மீட்பு படையினர் கற்களை அகற்றி இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இன்னொருவர் உடல் மீட்பு

அப்போது, பாறையில் இடுக்குகளில் சிக்கி பிணமாக கிடந்த ஒருவரது உடலை மீட்டனர். பின்னர் பேரிடர் மீட்புக்குழுவினர் அந்த உடலை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க 2 பேரின் உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர். அப்போது, இறந்தது காக்ைககுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து 6-வது நபரான தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் ராஜேந்திரன் என்பவரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் கொட்டும் மழையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணி இரவு வரை நீடித்தது.

போலீஸ் சூப்பிரண்டு முகாம்

இந்த மீட்பு பணிகளை காலை முதலே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சம்பவ இடத்தில் முகாமிட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் யாரும் வராத அளவுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story