எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மீது மேலும் ஒரு மோசடி புகார்
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மீது மேலும் ஒரு மோசடி புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி (வயது 55). இவர், அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமியிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆண்டு நடுப்பட்டி மணி, ரேஷன் கடையில் தனது உறவினர்கள் 2 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் வாங்கினார். வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு துணை கமிஷனர் மாடசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.