வைப்பாறு கரையில் மேலும் புதிய தொல்லியல் மேடு


வைப்பாறு கரையில் மேலும் புதிய தொல்லியல் மேடு
x

சாத்தூர் அருகே வைப்பாறு கரையில் மேலும் புதிய தொல்லியல் மேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே வைப்பாறு கரையில் மேலும் புதிய தொல்லியல் மேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தொல்லியல் மேடுகள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் வைப்பாற்றங்கரையில் சங்கரநத்தம் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஆற்றின் இரு கரைகளிலும் மிக தொன்மையான தொல்லியல் மேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு நுண்கருவிகள், விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், மண்ணால் ஆன எடைக்கல், கல்லால் செய்த பாசிமணி, சங்கு வளையல்கள், அதிக அளவில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், வில் மற்றும் அம்பு போன்ற உருவம் பொறித்த பானைக்குறியீடு உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வைப்பாறு

இதுகுறித்து சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினருமான ரவிச்சந்திரன் கூறியதாவது:- வைப்பாற்றங்கரையில் 1986-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் பாலச்சந்திரன் என்பவரால் கண்டறியப்பட்டு, தற்போது தமிழக தொல்லியல் துறையால் அகழ்வாராய்வு செய்யப்பட்டு வரும் வெம்பக்கோட்டை தொல்லியல் மேடு இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. வைகை ஆற்றின் தெற்கே வைப்பாற்றங்கரையிலும் அதனோடு இணையும் நதிகளில் ஒன்றான அர்ச்சுனா நதி கரையில் இருக்கும் தொன்மை இடங்களில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகளே அதிகம் கிடைத்துள்ளன.

செழுமையான நாகரிகம்

அத்துடன் கற்காலம் என்று அழைக்கப்படும் சங்ககால மக்கள் பயன்படுத்திய பல்வேறு தடயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. சங்கரநத்தத்தில் சுத்தியலாக பயன்படுத்தப்பட்ட புதியகற்கால கருவி ஒன்று தற்போதைய கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மிக அரிதாகவே புதியகற்கால கருவிகள் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன. ஆகவே இவ்விடத்தில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தங்களின் தேவையின் பொருட்டு புதிய கற்கால கருவிகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தி இருக்கக்கூடும் என அறிய முடிகிறது. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கருவி காலம் முதல் பெரும் கற்காலமான சங்ககாலம் என தொடர்ந்து மக்கள் இங்கு வசித்து இருப்பதால் வைப்பாற்றங்கரைகளில் செழுமையான நாகரிகம் செழித்தோங்கி வளர்ந்து இருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story