விபத்தில் மேலும் ஒருவர் சாவு; டிராக்டர் டிரைவர் கைது
கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் விவசாயி பலியானதை தொடர்ந்து, காயம் அடைந்த அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் விவசாயி பலியானதை தொடர்ந்து, காயம் அடைந்த அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வாகனம் மோதியது
கோவில்பட்டி அருகே உள்ள கார்த்திகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 65). விவசாயி இவர் கடந்த 16-ந் தேதி அதிகாலையில் தனது மொபட்டில் மனைவி பார்வதி (62) என்பவருடன் கோவில்பட்டிக்கு புறப்பட்டு வந்தார்.
கெச்சிலாபுரம் விலக்கு அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பெண் சாவு
படுகாயம் அடைந்த பார்வதியை கோவில்பட்டி மேற்கு போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பார்வதி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், ஹரி கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
டிரைவர் கைது
விசாரணையில், மொபட் மீது மோதியது குமாரபுரம் தெற்கு தெருவை சேர்ந்த அருளப்பன் மகன் ராதாகிருஷ்ணன் (57) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவர் ஓட்டி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.