மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
போலி சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த பெண் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
வேலூர்
போலி சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த பெண் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
போலி சான்றிதழ்
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்கள் மீதும், போலி மருத்துவ சான்றிதழ் வாங்கி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், குடியாத்தம் தாலுகா லட்சுமணாபுரத்தை சேர்ந்த நவநீதம் (வயது 38) என்ற பெண் போலி மருத்துவ சான்றிதழ் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்தனர்.
திருமண தரகர்
இந்த நிலையில், வேலப்பாடி சேர்வைமாணிக்கம் தெருவை சேர்ந்த தினகரன் (67) என்பவர் அடையாள அட்டை பெற்று பலருக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தினகரன் திருமண தரகர், துடைப்பம் விற்பனை செய்தல் போன்ற வேலைகளை பார்த்து வந்தார். அதேவேளையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒரு சங்கத்திலும் அவர் வேலை செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சங்கத்தின் நிர்வாக பொறுப்பு அவர் வசம் வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் தாலுகா அலுவலகங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கும் வரும் பொதுமக்களை அணுகி அவர்களிடம் பணம் பெற்று அடையாள அட்டை வழங்கி உள்ளார். இதில் அவருக்கு பெண் ஒருவர் உடந்தையாக இருந்து உள்ளார்.
30-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சான்றிதழ் மூலம் அடையாள அட்டை பெற்று கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய அந்த பெண்ணை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினார்.