லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து


லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து
x

லாரி மீது மற்றொரு லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெட்டி, பெட்டியாக 6 டன் பழங்கள் சரிந்தன.

திருப்பத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து 5½ டன் மாதுளம் பழம், ½ டன் கொய்யாப்பழம் என 6 டன் பழங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு போச்சம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக வந்து அருணாச்சலம் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது.

இதில் பழங்கள் ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சேதமடைந்து அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கள் இருந்த பெட்டிகள் சரிந்தன. நல்லவேளையாக டிரைவர் அருணாச்சலம் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர். லாரியில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பழங்கள் பெட்டிகளுடன் சரிந்து சேதமடைந்தன.

விபத்து நடந்ததும் மோதிய லாரியின் டிரைவர் லாரியை அங்கேயே சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story