இன்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி


இன்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலை 10 மணிக்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று காலை 10 மணிக்கு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்க வேண்டும்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் எனது தலைமையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இம்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்போன் மற்றும் கணினிகளில் https://enforcementbureautn.org/pledge என்ற இணையதளம் வழியாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இணையதளம் வழியாக உறுதிமொழியினை ஏற்றுக் கொள்பவர்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யும் பொழுது அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தை போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story