ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர். மேலும், கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர். மேலும், கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே மீன் துறை அதிகாரிகள் மீனவர்களின் விசைப்படகுகள் நல்ல நிலைமையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். இதனிடையே அதிகாரிகள் விசைப்படகுகளில் ஆய்வு நடத்துவதற்கு லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை மீன்துறை அலுவலகத்தின் கதவுகளை பூட்டி இரவு முழுவதும் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் மீன்துறை அலுவலகத்தில் இருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் போலியான ஆவணங்களை தயார் செய்து படகுகளுக்கு உரிமை வழங்கியது உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

பரபரப்பு

இதுதொடர்பாக மீன்துறை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசு வழங்கும் மானிய டீசலை பெறுவதற்காக மீனவர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் படகுகளை இயக்க அனுமதி வழங்கியதும், ஒரே நம்பரில் இரண்டு, மூன்று படகுகள் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ஓராண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வந்து உள்ளதாகவும் லஞ்சஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story