என்.எல்.சி.யில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா

என்.எல்.சி.யில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா நடைபற்றது. ஒருவாரம் நடந்த இந்த விழாவின் நிறைவு விழா நேற்று நெய்வேலியில் நடைபெற்றது.
இதற்கு என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ் குமார் தலைமை தாங்கினார். முன்னதாக தலைமை பொது மேலாளர் அசோக் கோட்டே வரவேற்றார். மத்திய பல்லூயிர் பெருக்க ஆணைக்குழுவின் செயலாளர் ஜெஸ்டின் மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
விழாவில், என்.எல்.சி. இந்தியா நிறுவன கண்காணிப்புதுறையின் செய்தி மலர் கண்காணிக்கும் கண்கள் என்கிற நிகழ்ச்சியில் ஜெஸ்டின் மோகன் மின்னணு வடிவில் வெளியிட்ட முதல் பிரதியை நிறுவன தலைவர் ராக்கேஷ் குமார் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நிறுவனத்தின் தேவையற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான வாழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டை நிறுவன தலைவர் ராக்கேஷ் குமார் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், என்.எல்.சி. நிறுவனம் மிகப்பெரிய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். ரூ.71 ஆயிரம் கோடியில் மதிப்பிலான புதிய மின் திட்டங்களையும், சுரங்க திட்டங்களையும் அமைக்கு இருக்கும் நிலையில் அதற்கு பயன்படுத்தப்படும் நிதி அனைத்தும் பொதுமக்ளின் நிதி என்பதை உணர்ந்து, நேர்மையாகவும், மறைவின்றியும் ஊழலுக்கு சிறிதும் இடமின்றி மேற்கொண்டு வரப்படுகிறது என்று அவர் பேசினார்.
தொடர்ந்து ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் போட்டியும், மாணவர்களிடையே பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் ஒற்றாடல் துறையில் விழிப்புணர்வுடன் பணி செய்த ராஜேந்திரகண்ணன், சுந்தர், ஜேக்கப் செல்வின் நேசகுமார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் என்.எல்.சி. நிறுவன திட்டம் மற்றும் செயலாக்க துறை இயக்குனர் மோகன் ரெட்டி, சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திர சுமன், கண்காணிப்பத்துறை தலைமை அதிகாரி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை பொது மேலாளர் இரணியன் நன்றி கூறினார்.






