வட்டார போக்குவரத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


வட்டார போக்குவரத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
x

தாந்தோணிமலை, தரகம்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

கரூர்

ரூ.15 ஆயிரம் பறிமுதல்

தாந்தோணிமலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த பணம் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது என்பன உள்பட பல்வேறு கோணங்களில் அங்கிருந்த அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு 7 மணிவரை நடந்தது.

சார்பதிவாளர் அலுவலகம்

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில், சார்பதிவாளராக தனபால் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 2 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தரகம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏற்கனவே டோக்கன் வாங்கி பதிவுக்கு தயாராக இருந்த பத்திரங்கள் பதியப்பட்டது.

மேலும் பத்திரப்பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் ஏதேனும் வாங்கி பதிவு நடந்ததா? எனவும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 10.30 மணிக்கு முடிவடைந்தது. இதில் கணக்கில் வராத ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story