முன்னாள் அமைச்சர் காமராஜ் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் கடந்த காலகட்டங்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் தொடர்புடைய 49 இடங்களில் சோதனை நடத்தினர். திருவாரூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் டாக்டர் ஆவார். இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார். அவர் சிங்காநல்லூர் கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளார். அந்த வீட்டில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார்.
10 மணி நேரம் நடந்தது
இந்தநிலையில் இன்பன் வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை கோவை மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் மொத்தம் 7 பேர் கொண்ட குழுவினர் சென்றனர். அப்போது டாக்டர் இன்பன் வீட்டில் இருந்தார். அவரிடம் உங்கள் வீட்டில் சோதனை நடத்தப்போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது கிடைத்த சில ஆவணங்களை காட்டி, அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அதற்கு டாக்டர் இன்பன் விளக்கம் அளித்தார். சோதனையையொட்டி இன்பன் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு பாதுகாப்பு பணிக்காக கோவை மாநகர போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது மாலை 5 மணி வரை 10 மணி நேரம் நடந்தது. இதில் வீட்டில் இருந்த சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.