திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

திருச்சி

துணை போக்குவரத்து ஆணையர்

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிகால் நேருஜிநகரில் வசித்து வருபவர் அழகரசு (வயது 56). இவர் திருச்சியில் துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராணி (52). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் டாக்டருக்கு படித்துள்ளனர். மூத்தமகள் மருத்துவ மேற்படிப்பு முடித்துள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அழகரசுக்கு சொந்த ஊர் சேலம் அஸ்தம்பட்டி ஆகும்.

அழகரசு, கடந்த 22-6-2009 முதல் 22-9-2011 வரை திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராகவும், 1-4-2012 முதல் 18-7-2012 வரை நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலராகவும் பணியாற்றினார். பின்னர் 20-7-2012 முதல் 23-10-2014 வரை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றிய அவர், 23-10-2014 முதல் 8-1-2018 வரை மீண்டும் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து

இந்தநிலையில் கடந்த 1-4-2010 முதல் 31-3-2016 வரை இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 813 மதிப்பில் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை சேர்த்ததாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதுபற்றி புலன்விசாரணை செய்தபோது, அவர் வருமானத்துக்கு அதிகமாக 97.70 சதவீதம் சொத்து சேர்த்தது உண்மை என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அழகரசு மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி ராணி மீதும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு கடந்த 10-ந்தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே பதவி உயர்வு பெற்று திருச்சியில் துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வரும் அழகரசு, திருச்சி வில்லியம் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் முதல் தளத்தில் 7-வது எண் சொகுசு அறையில் தனியாக தங்கி உள்ளார்.

திடீர் சோதனை

இந்தநிலையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென அழகரசு தங்கியுள்ள சொகுசு அறைக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆவணங்கள், நகை, பணம் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை குறித்து திருவண்ணாமலை போலீசாருக்கு அறிக்கை அனுப்பப்படும். மேலும், சேலத்திலும், திருவண்ணாமலையிலும் உள்ள அழகரசுவின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நாளை (இன்று) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த உள்ளனர் என்றனர்.


Next Story