ஊழல், முறைகேடு நடந்ததாக புகார்: விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
ஊழல், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.
மேலும், ஆவின் நிறுவனத்தில் உற்பத்தியாகும் நெய், தயிர், ஐஸ்கிரீம் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், விற்பனை பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ள அதிகாரி ஒருவர், முகவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும் சென்னையில் உள்ள ஆவின் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இந்நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்திற்கு வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள விற்பனை பிரிவில் கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விவரம் மற்றும் விற்பனை செய்ததற்கான ஆவணங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் கணக்கு பிரிவிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றொரு குழுவாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கின
அப்போது கடந்த சில ஆண்டுகளில் எத்தனை பால் விற்பனையகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது, எவ்வளவு தொகைக்கு பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. பல மணி நேரமாக நடந்த இந்த சோதனையின்போது ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் சென்னைக்கு புறப்பட்டுச்சென்றனர்.
விசாரணை முழுவதுமாக முடிந்ததும் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.