நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!


நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!
x

நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் தற்போது நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் அய்யப்பன் கோவில் எதிரே உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் அறையின் கதவுகளை உள்பக்கமாக பூட்டினர். வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அவர்களது செல்போன்களையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் பூபதியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் தந்தை வீடு மற்றும் மாமனார் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் அடிக்கடி அறை எடுத்து தங்கும் நாமக்கல்லில் உள்ள சாமி லாட்ஜிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பூபதி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது முறைகேடு தொடர்பாக ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

சோதனையில் போலீசாரிடம் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் நாமக்கல் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story