போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
குமரி மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
ஓவிய கண்காட்சி
போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்புமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியங்களை வரைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தனர். இதில் 5 ஆயிரத்து 400 ஓவியங்கள் வந்திருந்தன.
டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார்
அவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள 8 வகுப்பறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி தொடக்க விழா நேற்று டதி பள்ளியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவா்கள் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் போதை மற்றும் போதை ஊசியால் ஏற்படும் தீமைகள், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும், பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சி ஒரு வாரம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியங்கள் மாணவர்களால் வரையப்பட்டு, தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை நடந்த விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியில் 3 ஆயிரம் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேலான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை ஒழிப்பு நடவடிக்கையை கை எடுத்தால் மாவட்டத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் இருக்காது. வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.