போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 27 Jun 2023 1:45 AM IST (Updated: 27 Jun 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

நீலகிரி


கூடலூர்


கூடலூர், கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


விழிப்புணர்வு பேரணி


ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந் தேதி உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கூடலூரில் வருவாய், காவல்துறை உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று தனியார் பள்ளி மைதானத்தை அடைந்தது. பேரணியில் கூடலூர் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக கோஷமிட்டவாறு சென்றனர்.


உறுதிமொழி ஏற்பு


தொடர்ந்து போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் சாகுல் ஹமீது, சுசீலா, ஹரி கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் தேவர்சோலையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலை வழியாக நடைபெற்றது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் உள்பட போலீசார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


கோத்தகிரி காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், யாதவ கிருஷ்ணன், குணா, பப்பிலா ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல், காமராஜர் சதுக்கம் வழியாக நேரு பூங்கா வரை பேரணி நடந்தது. பின்னர் அனைவரும் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


குன்னூர்


இதேபோல் குன்னூர் காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி பலூன்கள் பறக்க விட்டு தொடங்கி வைத்தார். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணியில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.



Next Story