போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பழனியில் 2 ஆயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உறுதிமொழி
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பழனியில் 2 ஆயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உறுதிமொழி எடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பழனியில் 2 ஆயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உறுதிமொழி எடுத்தனர்.
2 ஆயிரம் மாணவர்கள்
பழனி போலீஸ் துறை, வருவாய்த்துறை சார்பில் 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' என்பதை வலியுறுத்தி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. சரவணன் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் (டவுன்), மகேந்திரன் (போக்குவரத்து) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பழனி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேர் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் மயில் ரவுண்டானா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட சாலையோரம் மாணவர்கள் மனித சங்கிலியை போல் வரிசையாக நின்றனர். அதையடுத்து ஆர்.டி.ஓ. சரவணன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை வாசிக்க, அதனை அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பழனியாண்டவர் கல்லூரி முதல்வர்கள் துரைமாணிக்கம் (கலை பண்பாட்டு), புவனேஸ்வரி (மகளிர் கல்லூரி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானலில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போலீசார் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆர்.டி.ஓ.ராஜா தொடங்கி வைத்தார். கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வத்தலகுண்டு சாலை வழியாக சென்று மூஞ்சிக்கல் வரை நடைபெற்றது. இதில், தாசில்தார் முத்துராமன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அரசு மகளிர் கல்லூரி, கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல் போலீசார் நடைபெற்ற ஊர்வலத்தை, போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி தொடங்கி வைத்தார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள், போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில், பல்கலைக்கழக பதிவாளர் சீலாஇ, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, நிதி அலுவலர் சீதாராமன் மற்றும் மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இடையக்கோட்டை
இதேபோல் இடையக்கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் இடையக்கோட்டையில் உள்ள நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமை தாங்கி, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர், "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற நிலையை அடைந்திடும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரபாண்டியன் நன்றி கூறினார்.
நிலக்கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் நிலக்கோட்டை ெஹச்.என்.யூ.பி.ஆர். பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், நிலக்கோட்டை போலீஸ் நிலையம், நால்ரோடு, பஸ் நிலையம், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி முதல்வர் குமரேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்பிரசாத், மயில்ராஜ், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செம்பட்டி, செந்துறை
செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகள் செந்துறை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், நத்தம் போலீசார் கலந்துகொண்டனர்.
செம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், சித்தையன்கோட்டை வித்ய சிக்சா பள்ளி, காமுபிள்ளைசத்திரம் கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குஜிலியம்பாறை போலீஸ் துறை சார்பில் குஜிலியம்பாறையில் நடைபெற்ற ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், பொன்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், குஜிலியம்பாறை அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, ஊர்வலமாக சென்றனர். குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், காமராஜர் சிலை, கடைவீதி சாலை வழியாக சென்று குஜிலியம்பாறை பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
வத்தலக்குண்டுவில் நடைபெற்ற ஊர்வலத்ைத, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாணி, ராஜேந்திரன், ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஊர்வலம் சென்றனர்.